டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை சோதனை செய்ய அனுமதிக்காத வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் உத்தரவு


டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை சோதனை செய்ய அனுமதிக்காத வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 8:18 PM GMT)

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை சோதனை செய்ய அனுமதிக்காத வீட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

அரக்கோணம்,

அரக்கோணத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து நகராட்சி, சுகாதார துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்தாய்வு நடத்தினார்.

அப்போது கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேலை நேரத்தை காலை 6 மணியில் இருந்து தொடங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கு செல்லும் போது அங்கு தேவையில்லாமல் கிடக்கும் தேங்காய் மட்டைகள், டயர்கள், உபயோகமற்ற தொட்டிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

டெங்கு ஒழிப்பு பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்காத வீட்டிற்கு நகராட்சி மூலமாக எச்சரிக்கை செய்ய வேண்டும். அதே வீட்டில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் முதலில் அபராதம் விதிக்க வேண்டும், அதையும் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லையென்றால் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும், பின்னர் வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அரக்கோணம் நகரத்தில் 41 பேர்களுக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவ்வாறு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டின் மீது தனிக்கவனம் செலுத்தி வீட்டை சுற்றி கூடுதல் பணியில் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும், மேலும் ஊரக பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணியை துரிதப்படுத்த வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 348 பேர்களுக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு வேலூர் மாவட்டத்தில் 792 பேர்களுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்து உள்ளது. டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதற்கு காரணம் பணியாளர்கள் சரியாக டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடவில்லை என்பது தெரிகிறது. பணியை சரியாக செய்யாத பணியாளர்களுக்கு முதலில் சம்பளத்தை நிறுத்த வேண்டும், அதன்பின்னர் பணியில் இருந்து அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு கொசுப்புழு இருப்பதாக கண்டறியப்படும் வீட்டின் உரிமையாளர்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். அதன்பின்னர் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவடத்தில் 2 ஆயிரம் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே டெங்குவை முழுமையாக ஒழிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ், நகராட்சி ஆணையாளர் முருகேசன், பொறியாளர் சண்முகம், மேலாளர் கோபிநாத், தாசில்தார் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரை, சுகாதார அலுவலர் அருள்செல்வதாஸ், சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீகாந்த் உள்பட அலுவலர்கள், ஊழியர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story