மாவட்டத்தில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


மாவட்டத்தில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 12 Oct 2019 9:30 PM GMT (Updated: 12 Oct 2019 8:18 PM GMT)

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம், 

எடப்பாடி வெள்ளகரட்டு திம்மராயபெருமாள் கோவில், பழைய எடப்பாடி பெருமாள் கோவில், ஜலகண்டாபுரம் ரோடு மூக்கரை பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஜலகண்டாபுரம் ரோட்டில் உள்ள மூக்கரை பெருமாள் கோவிலில் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

வெள்ளகரட்டு திம்மராய பெருமாள் கோவிலில் வன்னியர்குல சத்திரியர் சமூகத்தினர் சார்பில் ஸ்ரீதேவி, பூதேவி திம்மராய பெருமாளுக்கு திருக்கல்யாண விழா நடைபெற்றது. தொடர்ந்து சாமி சிலைகள் அலங்காரம் செய்து ஊர்கவுண்டர்கள் தலைமையில் வெள்ளாண்டிவலசையில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

நங்கவள்ளியில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சாமிக்கு அபிஷேக, ஆராதனை, அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல சோரகைமலை வேட்ராய பெருமாள் கோவில், வனவாசி மலை பெருமாள் கோவில், மேச்சேரி கோட்டை பெருமாள் கோவில், மேச்சேரி அமரத்தானூரில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மேச்சேரி எறகுண்டப்பட்டி சைவ-வைணவ திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ரங்கநாதர் பெருமாள் கோவில்களில் அபிஷேக, ஆராதனை, அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேவூர் அருகே அரசிராமணி பேரூராட்சி சூரியன்மலை அடிவாரத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வெள்ளூத்து பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் கோவில் சன்னதியில் தானியங்கள் மற்றும் பழவகைகளை சூறையிட்டனர். சிலர் காணிக்கையாக பசுக்களை கோவில் வளாகத்தில் விட்டு சென்றனர். தொடர்ந்து கோவிலில் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்தகொண்டு சாமி தரிசனம் செய்தனர். செட்டிப்பட்டி பாலம் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வீரகனூர் கஜவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அயோத்தியாப்பட்டணம் கோதண்ட ராமர் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி கோமாதா பூஜை, மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் உற்சவருக்கு தங்க கவசம் சாத்துப்படி செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கருட வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோதண்டராமர் சாமி இறையருள் நற்பணி மன்றம், மேட்டுப்பட்டி, தாதனூர், அயோத்தியாப்பட்டணம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சேலம் குகை திருப்பாவை குழுவின் சார்பில் அழகிரிநாத சாமி (கோட்டை பெருமாள்) வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது. இதையொட்டி குகை ஆறுமுக பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சிவபாண்டுரங்க பஜனை கோவிலில் அழகிரிநாதசாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து அழகிரிநாதசாமி வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.

இந்த ஊர்வலம் திருச்சி மெயின் ரோடு, லைன் ரோடு, அம்பலவாணம் சாமி கோவில் தெரு, 2-வது முனியப்பன் கோவில், மூங்கப்பாடி தெரு வழியாக மீண்டும் சிவபாண்டுரங்க பஜனை கோவிலை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை குகை திருப்பாவை குழுவின் தலைவர் முத்தண்ணன், துணைத்தலைவர்கள் தியாகராஜன், சக்கரவர்த்தி ராஜகோபால், பொருளாளர் வெங்கடேஸ்வரன், நிர்வாகிகள் நடராஜன், ராம்ராஜ், செயல் அலுவலர் குமரவேல், தக்கார் சுதா மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Next Story