மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம்: சென்னை செல்லும் அதிவிரைவு ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் போராட்டம்


மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம்: சென்னை செல்லும் அதிவிரைவு ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 8:18 PM GMT)

சென்னை செல்லும் அதிவிரைவு ரெயிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 1½ மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், 

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக சென்னைக்கு அதிவிரைவு ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினசரி மதியம் 3.10 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் அந்த ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு செல்லும்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் இரவு 7.40 மணிக்கு அந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் 7.55 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது முன்பதிவு இருக்கை பெட்டியில் (எஸ் 2) பயணம் செய்தவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்த ரெயில் நிலைய அதிகாரிகள், பயணிகளிடம் விசாரித்தனர்.

அப்போது தாங்கள் பயணம் செய்யும் பெட்டியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்விளக்குகள் எரியவில்லை. மின்விசிறிகள் இயங்கவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டோம். மேலும் குழந்தைகளும் தூக்கமின்றி தவிக்கின்றனர். எனவே உடனடியாக எங்கள் பெட்டியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய வேண்டும் என்று பயணிகள் கூறினர். ஆனால், சேலம் ரெயில் நிலையத்துக்கு சென்றவுடன் பெட்டியில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துவிட்டு சென்றனர்.

தொடர்ந்து ரெயிலும் இயக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் மீண்டும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். பின்னர் ரெயில் நிலைய அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தாங்கள் பயணம் செய்யும் பெட்டியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யாத வரை ரெயில் புறப்பட அனுமதிக்கமாட்டோம் என கூறினர். இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும் பயணிகள் சமாதானம் அடையவில்லை. பின்னர் அந்த பெட்டியில் ஏற்பட்ட மின்சார பழுதை சரிசெய்ய ரெயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி மின்சார பழுதை சரிசெய்தனர். அதன் பின்னர் பயணிகள் சமாதானம் அடைந்து ரெயிலை இயக்க சம்மதித்தனர்.

இரவு 7.40 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்த பாலக் காடு-சென்னை அதிவிரைவு ரெயில் 1½ மணி நேரம் தாமதமாக 9.10 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயில் நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story