சேலம் நரசோதிப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் திருட்டு


சேலம் நரசோதிப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 Oct 2019 4:15 AM IST (Updated: 13 Oct 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

சேலம் நரசோதிப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம்,

சேலம் நரசோதிப்பட்டி தாயங்காடு பகுதியை சேர்ந்தவர் சரோஜா (வயது 50). இவர், கடந்த 8-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று காலையில் சேலம் திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரோஜா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

சரோஜா தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள், இரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பதி கோவிலுக்கு சென்ற பெண்ணின் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story