சேலத்தில், தூய்மையாக பராமரிக்காத குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு ரூ.14¾ லட்சம் அபராதம்
சேலத்தில், தூய்மையாக பராமரிக்காத குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.14¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், 60 மலேரியா பணியாளர்கள், 60 சுகாதார மேற்பார்வையாளர்கள், 750 கொசுப்புழு கண்டறிந்து நீக்கும் பணியாளர்கள் மற்றும் 30 பரப்புரையாளர்கள் என மொத்தம் 2,900 களப்பணியாளர்கள் தீவிர தொற்று நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், பருவமழை காலத்தினை முன்னிட்டு சேலம் மாநகராட்சி பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் கடந்த மாதம் முதல் தீவிர துப்புரவு மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்காத குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சூரமங்கலம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 528 குடியிருப்புகள் மற்றும் வணிக உபயோக கட்டிடங்கள், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 2 ஆயிரத்து 188 குடியிருப்புகள் மற்றும் வணிக உபயோக கட்டிடங்கள், அம்மாபேட்டை மண்டலத்தில் 661 குடியிருப்புகள் மற்றும் வணிக உபயோக கட்டிடங்கள், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஆயிரத்து 92 குடியிருப்புகள் மற்றும் வணிக உபயோக கட்டிடங்கள் என 4 மண்டலங்களிலும் மொத்தம் 6 ஆயிரத்து 469 குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்கள் உள்ளிட்ட வணிக உபயோக கட்டிடங்கள் தூய்மையாக பராமரிக்காதது கண்டறியப்பட்டு, சம்மந்தப்பட்ட உரிமையாளர்களிடமிருந்து ரூ.14 லட்சத்து 82 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தியேட்டர்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், தேநீர் விடுதிகள், உணவகங்கள், காலிமனைகள் மற்றும் பணிமனைகள் போன்ற இடங்களில் தொடர்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் குப்பைகள் மற்றும் தேங்கியுள்ள மழைநீர் போன்றவைகள் அகற்றப்படாமல் தூய்மையாக பராமரிக்காதது கண்டறியப்பட்டால், மாநகராட்சி பொது சுகாதார விதிகளின் கீழ் சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் வசூலிக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும், மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கி, பொது சுகாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story