கொடைக்கானலில் தொடர் மழை எதிரொலி: அணைகளின் நீர்மட்டம் உயர்வு
கொடைக்கானலில் தொடர் மழை எதிரொலியாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் சுமார் 3 மணி நேரம் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதில் அப்சர்வேட்டரியில் 17.7 மில்லி மீட்டர், போட் கிளப்பில் 23 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழை காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.நேற்று காலை 8 மணி நிலவரப்படி பழைய அணையின் நீர்மட்டம் 15 அடியாகவும் (மொத்த உயரம் 21 அடி), புதிய மனோரஞ்சிதம் அணையின் நீர்மட்டம் 23 அடியாகவும் (மொத்த உயரம் 36 அடி) உயர்ந்துள்ளது. மேலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் சீரான அளவில் உள்ளது.
அணைகளில் தற்போது இருக்கும் தண்ணீரை கொண்டு 6 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கலாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நட்சத்திர ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியதுடன், அதிக அளவு உபரி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தரைப்பகுதியில் உள்ள பல்வேறு அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் செல்கிறது. இருப்பினும் பெரியகுளம் நகருக்கு குடிநீர் வழங்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியின் நீர்மட்டம் உயராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story