நெல்லிக்குப்பத்தில் குப்பை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


நெல்லிக்குப்பத்தில் குப்பை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2019 3:30 AM IST (Updated: 13 Oct 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் குப்பை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வாகனம் மூலம் எடுத்துச்சென்று, கீழ்பட்டாம்பாக்கம் திருக்குளம் குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். மேலும் குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கும். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். எனவே குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, அவ்வப்போது போராட்டமும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு, குப்பை கிடங்கில் இருந்து குப்பைகளை அள்ளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்த நிறுவனத்தினர், அந்த குப்பை கிடங்கு கதவை மூடி, பூட்டு போட்டு பூட்டினர்.

இதற்கிடையில் நேற்று மதியம் துப்புரவு தொழிலாளர்கள், குப்பைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் குப்பை கிடங்கிற்கு வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அதிகாரிகள், தற்காலிகமாக இந்த குப்பைகளை கொட்ட வந்துள்ளோம். ஒரு சில தினங்களில் குப்பைகளை அகற்றி விடுவோம் என்றனர். கிடங்கில் குப்பைகளை கொட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதாக கூறிவிட்டு, குப்பை லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு, துப்புரவு தொழிலாளர்களும், அதிகாரிகளும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story