மசினகுடி அருகே, கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட குட்டி யானை சாவு


மசினகுடி அருகே, கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட குட்டி யானை சாவு
x
தினத்தந்தி 12 Oct 2019 10:00 PM GMT (Updated: 12 Oct 2019 8:20 PM GMT)

மசினகுடி அருகே கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட குட்டி யானை பரிதாபமாக இறந்தது.

மசினகுடி,

மசினகுடி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே 2 குட்டிகளுடன் காட்டுயானை கூட்டங்கள் சுற்றி திரிகின்றன. இந்த யானை கூட்டத்தை மசினகுடி வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் மசினகுடி அருகே உள்ள மரவகண்டி நீர் நிலையத்திலிருந்து மாயார் அணைக்கு செல்லும் கால்வாயை யானை கூட்டம் ஒன்று கடந்து செல்ல முயன்று உள்ளது.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் குட்டியானை தண்ணீரீல் அடித்து செல்லபட்டது. கால்வாயில் அதிக தண்ணீர் சென்றதால் குட்டி யானையை மீட்க மற்ற யானைகள் போராடியும் முடியவில்லை.

இதனால் அந்த குட்டி யானை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. பின்னர் மாயார் அணையின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி வலையில் அந்த குட்டி யானை சிக்கி இருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து மசினகுடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் குட்டியானையை மீட்க போராடினர். ஆனால் அந்த குட்டி யானை இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் புலிகள் காப்பக துணை கள இயக்குனர் ஸ்ரீகாந்த் மற்றும் வனச்சரகர் மாரியப்பன் முன்னிலையில் குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த ஆண் குட்டி யானை பிறந்து சுமார் 2 மாதம் இருக்கும் என்பதும், தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் குட்டி யானையின் உடல் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

Next Story