திருவண்ணாமலையில் ரூ.2 கோடியில் உருவாக்கப்படும் அறிவியல் பூங்கா - பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு


திருவண்ணாமலையில் ரூ.2 கோடியில் உருவாக்கப்படும் அறிவியல் பூங்கா - பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 13 Oct 2019 4:15 AM IST (Updated: 13 Oct 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரிக்கரையில் ரூ.2 கோடியில் உருவாகும் அறிவியல் பூங்காவிற்கான பணிகளை விரைந்து முடிக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வேங்கிக்காலில் உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள ஏரிக்கரையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரூ.2 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவில் அறிவியல் சார்ந்த செயல் முறைகள் மற்றும் விளக்க படங்களும், பொறியியல், எந்திரவியல், இயற்பியல், வெப்பம், ஓசை ஆகியன குறித்த உபகரணங்களும், திசைகாட்டி, வெப்பமானி போன்றவைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இவை மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

மேலும் இங்குள்ள ஏரிக்கரையில் 200 மீட்டர் அளவில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. புற்கள், பூச்செடிகள், கலைக்கூடம் உள்ளிட்டவைகள் பூங்காவில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அதிகாரிகளுடன் நேற்று பூங்காவில் நடைபெறும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கும், மாணவர்களின் பயன்பாட்டுக்கும் கொண்டுவர அனைத்து பணிகளையும் 15 நாட்களுக்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் ஏ.அருணா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விவேகா, மின்துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.எம்.வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story