சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டருடன் இனி தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லை மயில்சாமி அண்ணாதுரை பேட்டி


சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டருடன் இனி தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லை மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
x
தினத்தந்தி 13 Oct 2019 4:45 AM IST (Updated: 13 Oct 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டருடன் இனி தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லை என்று தர்மபுரியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

தர்மபுரி,

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சுடர் நலஅறக்கட்டளை சார்பில் தாலுகா வாரியாக ஓவியப்போட்டிகள், அறிவியல் படைப்புகளை உருவாக்கும் திறன்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கும் விழா மற்றும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ஆகியவை தர்மபுரி சசிஞானோதயா அகாடமி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் பி.பாஸ்கர் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அரங்கநாதன், இயக்குனர்கள் இன்னிசை அரங்கநாதன், மணிவண்ணன், பிரேம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட மாவட்ட உதவிதிட்ட அலுவலர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ரிக் பள்ளி முதல்வர் சாமிநாதன் வரவேற்று பேசினார்.

பரிசுகள்

விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறிவியல் திறன்போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகளில் இடம் பெற்ற படைப்புகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

விழாவில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் மேகலா நன்றி கூறினார். விழாவை தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாய்ப்பு இல்லை

தமிழகம் தற்போது உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது. பள்ளிகளில் படிக்கும்போதே தங்களிடம் மறைந்து கிடக்கும் பல்வேறு திறன்களை மாணவர்கள் கண்டறிந்து கொள்ளும் வாய்ப்பை பெறும்போது அவர்கள் தெளிவான இலக்குடன் உயர்கல்விக்கு செல்ல முடியும். அது மாணவர்களுக்கும் அடுத்த தலைமுறை சமுதாயத்திற்கும் நல்லது. தமிழக அரசும், பள்ளிகளும் தற்போது மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி வருவதும், ஊடகங்கள் இவற்றை மக்களிடையே கொண்டு செல்வதும் பாராட்டுக்குரியது. அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இந்த வாய்ப்பை மாணவர்களும், பெற்றோர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை இனிமேல் தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லை. சந்திரயான்-2 திட்டம் சந்திரனில் இறங்குவதை மையமாக கொண்டது. சந்திரயான்-3 சந்திரனில் இருந்து திரும்பி வருவதை அடிப்படையாக கொண்டது. சந்திரயான்-2 திட்டம் முழுமையாக முடிந்த பின்னரே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story