மரக்கடையில் பதுக்கி வைத்த ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
கொடுங்கையூரில் உள்ள மரக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர், வியாசர்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டு இந்த பகுதியில் உள்ள கடைகளிலும், குடோன்களில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸ் உதவி கமிஷனர் உத்தரவின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கல்வியரசன் தலைமையில் தனிப்படை போலீசார் கொடுங்கையூர், வியாசர்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரகசிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
2 பேர் கைது
அப்போது கொடுங்கையூர் ஜம்புலிங்கம் காலனியில் உள்ள மரக்கடை ஒன்றில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் திரிவதை கண்டுபிடித்தனர். அதன் பேரில், தனிப்படை போலீசார் மரக்கடைக்கு சென்று சோதனை செய்தபோது, அங்கு மரங்களுக்கு இடையில் செம்மரங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளர் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த அசாருதீன் (வயது 30) மற்றும் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ஷகில் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், செம்மர கட்டைகளை ஆந்திராவிலிருந்து கடத்தி வந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் செம்மர கட்டையின் மதிப்பு மொத்தம் ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அதன் பின்னர், கைது செய்யப்பட்ட 2 பேர் மற்றும் செம்மரக்கட்டைகளை தனிப்படை போலீசார் சென்னை தேனாம்பேட்டை வனத்துறையில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story