பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து பிரதமரிடம் பேசுவேன் வாடிக்கையாளர்களிடம் முதல்-மந்திரி பட்னாவிஸ் உறுதி


பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து பிரதமரிடம் பேசுவேன் வாடிக்கையாளர்களிடம் முதல்-மந்திரி பட்னாவிஸ் உறுதி
x
தினத்தந்தி 13 Oct 2019 4:54 AM IST (Updated: 13 Oct 2019 4:54 AM IST)
t-max-icont-min-icon

பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் பேசுவேன் என்று தன்னை சந்தித்த அந்த வங்கி வாடிக்கையாளர்களிடம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்தார்.

மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி.) நடந்த ரூ.4 ஆயிரத்து 355கோடி மோசடியை தொடர்ந்து அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியது. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதித்தது.

இதனால் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10-ந் தேதி மும்பை வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் சந்தித்து முறையிட்டனர். அப்போது, இந்த பிரச்சினை தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தாதாசிடம் பேசுவதாக தெரிவித்தார். இந்த நிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தானேயில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த பிரசாரத்திற்கு பின் முதல்-மந்திரியை பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் சந்தித்து பேசினார்கள். அவர்கள் கூறியதை முதல்-மந்திரி பொறுமையுடன் கேட்டார்.

பின்னர், அவர் நாளை (இன்று) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாகவும், பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து பிரதமரிடம் பேசுவதாகவும் தெரிவித்தார். எந்த விலை கொடுத்தாவது வங்கியை மீட்பதாக கூறிய முதல்-மந்திரி மற்ற கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்பட்ட நிலை பி.எம்.சி. வங்கிக்கு ஏற்படாது என தெரிவித்தார்.

அதே நேரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் தற்போது எந்தவொரு வாக்குறுதியும் கொடுக்க முடியாது என முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறினார்.

Next Story