அந்தியூரில் கார் மீது மரம் முறிந்து விழுந்தது; 7 பேர் காயம்


அந்தியூரில் கார் மீது மரம் முறிந்து விழுந்தது; 7 பேர் காயம்
x
தினத்தந்தி 14 Oct 2019 4:00 AM IST (Updated: 13 Oct 2019 8:34 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் கார் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள கருப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 49). இவர் தனது குடும்பத்துடன் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அந்தியூர்-சத்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே இரவு 10 மணி அளவில் கார் சென்றபோது சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதில் புளியமரத்தின் கிளை கார் மீது விழுந்தது. இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அய்யோ அம்மா என்று சத்தம் போட்டார்கள். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி மாணிக்கம், அவருடைய மனைவி வள்ளியம்மாள் (47), கஸ்தூரி (27), சந்தோஷ் (14), கிருஷ்ணமூர்த்தி (19), சரண்யா (12), மீனாட்சி (14) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.

சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் கார் மீது விழுந்த மரத்தின் கிளையை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதற்கிடையே இதுபற்றி அறிந்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினார்கள். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story