கோபி பகுதியில் கொட்டித்தீர்த்த மழை: வாழை தோட்டம், நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கின


கோபி பகுதியில் கொட்டித்தீர்த்த மழை: வாழை தோட்டம், நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 14 Oct 2019 4:30 AM IST (Updated: 13 Oct 2019 8:38 PM IST)
t-max-icont-min-icon

கோபி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வாழை தோட்டங்கள், நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கின. பச்சைமலை கோவில் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நகரின் மையப்பகுதியில் செல்லும் கீரிப்பள்ளம் ஓடை, தடப்பள்ளி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கெடுத்தது. தடப்பள்ளி வாய்க்காலில் இருந்து மழை நீர் பாரியூரில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்தது.

தோட்டங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை, கரும்பு மற்றும் நெல் வயலகள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இதுபற்றி அறிந்ததும் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், வருவாய் ஆய்வாளர் ராஜித்குமார் ஆகியோர் அங்கு நேரில் சென்று சேத மதிப்புகளை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் நெல், கரும்பு, வாழைகளை பயிர் செய்தோம். இந்த திடீர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம் அடைந்துவிட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு முறை கோபி பகுதியில் மழை பெய்யும்போதும் கீரிப்பள்ளம் ஓடையில் ஏற்படும் வெள்ளம் தடப்பள்ளி வாய்க்காலில் கலக்கிறது. இதனால் அங்கிருந்்து தோட்டத்துக்குள் வெள்ளம் புகுவதால் பயிர் சேதமடைகிறது. எனவே கீரிப்பள்ளம் ஓடையில் இருந்து வரும் தண்ணீரை வாய்க்காலில் கலக்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. கோபி பச்சைமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை உருவானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று மண் சரிவை சரி செய்தனர்.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க வந்திருந்தனர். ஆனால் வெள்ளப்பெருக்கால் கரையில் இருந்து தண்ணீரை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி, பனையம்பள்ளி, நல்லூர், காவிலிபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 11.30 மணி வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புஞ்சைபுளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் உள்ள ஆசாத் வீதியில் புங்கமரம் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது.

இதில் ரோட்டில் நிறுத்தப்பட்டு் இருந்த நகைக்கடை உரிமையாளர் சண்முகம் என்பவரின் கார் சேதம் அடைந்தது. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் உடனே அங்கு சென்று பொதுமக்களுடன் சேர்ந்து மரத்தை அப்புறப்படுத்தினார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கோபிசெட்டிபாளையம் - 134

நம்பியூர் - 120

கவுந்தப்பாடி - 118

கொடிவேரி - 80.4

குண்டேரிப்பள்ளம் - 73

பவானி - 63

சத்தியமங்கலம் - 52

அம்மாபேட்டை - 47.4

பவானிசாகர் - 43.6

வரட்டுப்பள்ளம் - 41.8

பெருந்துறை - 28

சென்னிமலை - 8

தாளவாடி - 7

மொடக்குறிச்சி - 4

Next Story