உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடும் - டி.டி.வி.தினகரன்


உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடும் - டி.டி.வி.தினகரன்
x
தினத்தந்தி 14 Oct 2019 4:45 AM IST (Updated: 13 Oct 2019 9:23 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

திருப்பூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் மற்றும் ஈரோடு மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை குன்னத்தூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சிட்டிசன் ஈஸ்வரன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கராஜ், புறநகர் மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.பேசியதாவது:-

தேர்தல் ஆணையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளோம். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நிச்சயம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்வோம். ஒரே சின்னத்தை பெற்று பதிவு பெற்ற கட்சியாக போட்டியிடுவதற்காகவே இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை.

நமது கட்சியில் வந்து சேர்ந்து விஸ்வரூபம் எடுத்தவர், பரம்பரை அ.தி.மு.க.காரரான அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். என்னை தூக்கிப்பிடித்து நிறுத்தியவர்கள் தொண்டர்கள் தான். நமது கட்சியில் இருப்பவர்கள் சுயமாக முடிவு எடுத்து சுய விருப்பத்தில் கட்சியில் இருக்க வேண்டும்.

கட்சிக்கு வேகத்தடையாக இருப்பவர்கள் தான் விலகி சென்றுள்ளார்கள். தூண் எதுவும் சாய்ந்து விட வில்லை. ஒருவரை கட்சியில் இருந்து நீக்குகிறோம் என்றால் முறையாக விசாரித்து அதன் பிறகே நடவடிக்கை எடுக்கிறோம். பின்னால் இருந்து இயக்குவதால் பலர் நம்மிடம் இருந்து பிரிந்து செல்கிறார்கள்.

5 பொதுத்தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்கிற அனைத்து சக்தியையும் இறைவன் எனக்கு கொடுத்திருக்கிறார். இன்னும் 20 ஆண்டுகள் உங்களோடு சேர்ந்து உழைக்கும் மன உறுதியையும், உடல் உறுதியையும் கொடுத்திருக்கிறார். இந்த இயக்கம் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கம் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் ஜெயலலிதா வழியில் இந்த இயக்கத்தை செயல்படுத்த உருவாக்கப்பட்ட ஜனநாயக ரீதியான ஆயுதம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல் வரும்போது நெல்லிக்காய் போல் சிதறி விடுவார்கள். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆக்கி விடுவோம் என்று தற்போது தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். சிறைக்கு சென்று 3 வருடங்கள் ஆகியும் யாராவது அவரை சந்திக்க சென்றீர்களா?. அவருடைய கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக இருந்தபோது பரோலில் வர எதிர்ப்பு தெரிவித்தீர்கள். நடராஜன் மறைவுக்கு யாராவது வந்து அஞ்சலி செலுத்தினார்களா?.

இப்போது சசிகலா சிறையில் இருப்பதால் மக்களை குழப்புவதற்காக, அவரை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வதாக, அவரை அசிங்கப்படுத்துவது போல் பேசுகிறார்கள். துரோகம் செய்தவர்களுடன் அவர் எப்படி சேருவார். அமைச்சர் தங்கமணி, தினகரன் எங்களோடு சேர வாய்ப்பு இல்லை என்று கூறியிருக்கிறார். உங்களோடு நாங்கள் சேர வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதால் தான் ஆட்சி, அதிகாரம், வருமானம், பலன் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்கினோம்.

இந்த இயக்கம் வருங்காலத்தில் மாபெரும் வெற்றி பெறும் என்பது உறுதி. துரோகத்தை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம். தாய் உறவு, குட்டி பகை என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது.

தமிழகம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் அ.ம.மு.க. நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்கப்பட்டுள்ளனர். கிளை, ஊராட்சி, ஒன்றியம், நகரம், பகுதி நிர்வாகிகள் நியமனம் அனைத்தும் இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும். வருகிற 2021 -ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். மாபெரும் வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நமது இயக்கத்தை நிச்சயம் பதிவு செய்து விரைவில் சின்னம் வழங்கும். உள்ளாட்சி தேர்தலில் நாம் போட்டியிடுவோம் என்று உறுதியுடன் தெரிவிக்கிறேன். கொங்கு மண்டலம் அ.ம.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story