உடுமலையில் 14 பேரை கடித்து குதறிய வெறிநாய்


உடுமலையில் 14 பேரை கடித்து குதறிய வெறிநாய்
x
தினத்தந்தி 13 Oct 2019 10:00 PM GMT (Updated: 13 Oct 2019 6:34 PM GMT)

உடுமலையில்14 பேரை வெறிநாய் கடித்து குதறியது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உடுமலை,

உடுமலையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகிறது.அதனால் சாலைகளில் செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் உடுமலை நகராட்சி பகுதிக்குட்பட்ட ஏரிப்பாளையத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்தவர்களை ஒரு வெறிநாய் கடித்து குதறியது.. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். சிலர் அந்த நாயை துரத்தினார்கள்.

உடனே அந்த நாய் ஸ்டேட் பாங்க் காலனி,பெரிய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி காலனி,காந்திநகர் 2-வது காலனி , சந்திரசேகர் லே-அவுட் ஆகிய அடுத்தடுத்துள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு ஓடியது. அப்போது அந்த நாய் சாலையில் சென்றவர்களை கடித்து விட்டு அடுத்தடுத்த இடங்களுக்கு ஓடிச்சென்று தப்பி சென்று விட்டது.

வெறிநாய் கடித்து குதறியதில் 2 குழந்தைகள்,3 பெண்கள் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உடுமலை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்,நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டில் வசதி கிடைக்கவில்லை. இதனால் அவர் களுக்கு தரையில் அமர்ந்து சிகிச்சை பெற்றனர். உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.ஆர்.ஓம்பிரகாஷ் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.

பொதுமக்களை வெறிநாய் கடித்ததை தொடர்ந்து பெரியகோட்டை ஊராட்சி பகுதியில் ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. பொதுமக்களை கடித்த நாய் அந்த பகுதியில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படியும்,குழந்தைகளை வெளியே விட வேண்டாம் என்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது, உடுமலை, பெரியகோட்டை பகுதியில்சுற்றி திரியும் நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story