வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்


வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்
x
தினத்தந்தி 13 Oct 2019 11:45 PM GMT (Updated: 13 Oct 2019 6:43 PM GMT)

வெள்ளகோவிலில் மனைவியுடன் நிதி நிறுவன அதிபரை கொன்று புதைத்த விவகாரம் தொடர்பாக அவருடைய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்.

வெள்ளகோவில்,

திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் மதுரை ஆரப்பாளையம் மேலபொன்னகரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி வசந்தாமணி (42). இவர்களுக்கு பாஸ்கர் (27) என்ற மகனும், சரண்யா (25) என்ற மகளும் உள்ளனர். இதில் சரண்யாவுக்கு திருணமாகி கணவர், கவுசிக்குடன்(30) தாசநாயக்கனூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பாஸ்கருக்கு திருமணம் பேசி முடித்து வருகிற 1-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து திருமண பத்திரிகையை உறவினர்களுக்கு செல்வராஜூம், அவருடைய மனைவியும் காரில் சென்று கொடுத்தனர். கடைசியாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தாண்டகுமாரவலசில் உள்ள செல்வராஜின் உடன் பிறந்த அக்காள் கண்ணம்மாளுக்கு (54) கொடுக்க சென்றுள்ளனர். அங்கு பத்திரிகை கொடுத்து விட்டு புறப்படுவதாக செல்போனில், செல்வராஜ் தனது மகன் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின்னர் தம்பதி குறித்து எந்த தகவலும் இல்லை. இவர்கள் சென்ற கார், கரூர் அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுக்காலியூரில் அனாதையாக நின்றது. இந்த காரை சுற்றி மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. மேலும் காருக்குள் திருமண பத்திரிகை சிதறிக்கிடந்தன.

இந்த நிலையில் பாஸ்கர் தனது தந்தையின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பல முறை முயற்சி செய்தும் செல்போன் சுவிட்ச் ஆப் என்றே பதில் வந்தது. இதனால் அதிர்ச்சிடையந்த பாஸ்கர், தனது தாய்-தந்தைக்கு என்ன ஆனதோ? என்று கவலை அடைந்தார். இதையடுத்து வெள்ளகோவில் போலீசில், பாஸ்கர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஏற்கனவே பாஸ்கர் கூறிய தகவல் படி, செல்வராஜ் தனது மனைவியுடன் கடைசியாக பத்திரிகை கொடுத்த கண்ணம்மாளிடம் விசாரித்தால் உண்மை தெரியவரும் என்று உத்தாண்டகுமாரவலசில் உள்ள கண்ணம்மாள் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு வீ்ட்டில் இருந்த கண்ணம்மாளிடம் போலீசார் விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர். மேலும் அவருடைய வீ்ட்டின் அருகே உள்ள புதியதாக தோண்டப்பட்ட குழியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த குழியை தோண்டி பார்த்தபோது அதில் செல்வராஜூ்ம், அவருடைய மனைவியும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து போலீசார் கண்ணம்மாளை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல் வருமாறு:-

செல்வராஜூடன் பிறந்த பெண்கள் 3 பேர். அதாவது புஷ்பாத்தாள், சரஸ்வதி, கண்ணம்மாள். இதில் புஷ்பாத்தாள், சரஸ்வதி ஆகிய இருவருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் திருமாணமாகி கணவருடன் வசித்து வருகிறார்கள். கண்ணம்மாளை மட்டும் வெள்ளகோவிலில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கண்ணம்மாளின் மகள் பூங்கொடி. அவருக்கு திருமணமாகி விட்டது. கணவருடன் ஈரோட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் செல்வராஜின் தந்தை காளியப்ப கவுண்டருக்கு சொந்தமான பூமி4 ஏக்கர் இருந்துள்ளது. இந்த பூமியை செல்வராஜின் மகன் பாஸ்கர் பெயரில் காளிப்பகவுண்டர் உயில் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து அந்த 4 ஏக்கர் நிலத்தை ரூ.43 லட்சத்திற்கு செல்வ ராஜ் விற்பனை செய்துள்ளார். அதில் பங்கு வேண்டும் என்று கண்ணம்மாள் கேட்டுள்ளார். ஆனால் செல்வராஜ் பங்கு கொடுக்க மறுத்து விட்டார். எனவே ரூ.5 லட்சமாவது கொடு என்று கண்ணம்மாள் கேட்டுள்ளார். ஆனால் அந்த பணத்தை யும் கொடுக்க மறுத்ததோடு ரூ.1 லட்சத்தை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம்அடைந்த கண்ணம்மாள், பரம்பரை சொத்தை விற்று தம்பி குடும்பம் மட்டும் அனுபவிப்பதா? என்று ஆத்திரத்தில் இருந்துள்ளார். மேலும் தம்பியுடன் தகராறிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் பாஸ்கரின் திருமண பத்திரிகை கொடுக்க வந்த செல்வராஜியையும், அவருடைய மனைவியையும், மருமகன் நாகேந்திரனுடன்சேர்ந்து, தலையில் அம்மி கல்லை போட்டு கொன்று பிணத்தை வீ்ட்டின் அருகிலேயே குழி தோண்டி புதைத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ஈரோடு சென்று நாகேந்திரனையும் பிடித்து வந்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கண்ணம்மாளின் மகள் பூங்கொடி, நாகேந்திரனின் நண்பர் இளங்கோ ஆகியோரும் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடமும் போலீசார் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் தம்பதி புதைக்கப்பட்ட பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடய அறிவியல் உதவி இயக்குனர் வேல்முருகன் மற்றும் ஸ்ரீதர், கைரேகை துணை இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இன்று (திங்கட் கிழமை) உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த கொலையில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story