ஜாமீனில் வந்த இலங்கை வாலிபர்கள் தப்பிச்செல்ல உறுதுணையாக இருந்த 5 பேர் கைது


ஜாமீனில் வந்த இலங்கை வாலிபர்கள் தப்பிச்செல்ல உறுதுணையாக இருந்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2019 11:00 PM GMT (Updated: 13 Oct 2019 6:47 PM GMT)

ஜாமீனில் வந்த இலங்கை வாலிபர்கள் தப்பிச்செல்ல உறுதுணையாக இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமேசுவரம்,

இலங்கையை சேர்ந்தவர்கள் சங்கா கிராந்த்(வயது 31) மற்றும் முகமது சபுராம்(30). இவர்கள் மீது கொழும்பு போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் இலங்கையில் இருந்து கடந்த ஆண்டு கள்ளத்தனமாக தமிழகம் வந்துள்ளனர். அப்போது போலீசார், இவர்களை பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்து புழல்சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இதைதொடர்ந்து அவர்கள் இருவரையும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் தங்களிடம் ஒப்படைக்கும்படி கூறியது. அதற்கு போலீசார் தரப்பில் வழக்கு முடிந்ததும் ஒப்படைப்பதாக தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் வாலிபர்கள் இருவரும் கடந்த மாதம் பாம்பனில் இருந்து கள்ளத்தனமாக இலங்கைக்கு தப்பிச்சென்று கொழும்பு கோர்ட்டில் சரணடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகா‌‌ஷ் மீனா உத்தரவின் பேரில் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகே‌‌ஷ், பாம்பன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா மற்றும் போலீசார், வாலிபர்கள் இருவரும் இலங்கை தப்பிச்செல்ல உறுதுணையாக இருந்த நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக இன்னாசி(23), அபுல்காசிம்(31), டேனியல்(23), லாஸ்டிக்(30), நயினா சித்திக்(39) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் பவுஸ்கான் என்பவரை தேடிவருகின்றனர்.

Next Story