மேலூர் அருகே குழந்தைகளை மிரட்டும் மஞ்சள் காமாலை நோய்; கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலூர் அருகே குழந்தைகளை மிரட்டும் மஞ்சள் காமாலை நோய்; கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 14 Oct 2019 2:45 AM IST (Updated: 14 Oct 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே தும்பைப்பட்டி கிராமத்தில் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலூர்,

மேலூர் அருகே தும்பைப்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய் பாதித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு சிறுநீர் மற்றும் கண்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் காய்ச்சல் ஏற்படுகிறது. இதையடுத்து பெற்றோர், காய்ச்சல் பாதித்த தங்களது குழந்தைகளை அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் தனியார் பரிசோதனை மையங்களில் சோதனை செய்த போது மஞ்சள் காமாலை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியுள்ளதால் தும்பைப்பட்டி கிராம மக்கள் அச்சத்துடனேயும், நோயை கட்டுப்படுத்த முடியாமலும் அவதியுற்று வருகின்றனர்.

அந்த கிராமத்தில் குறிப்பாக லஷ்யராஜ்(வயது 3), லஜிதா ராய்(3), சந்தோஷ்(7), மதயானை(10), அப்துல் தாரிக் (5) உள்ளிட்டோர் தற்போது மஞ்சள்காமாலை நோய்க்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். மஞ்சள் காமாலை நோய் பரவ தண்ணீர் தான் காரணம் என்று டாக்டர்கள் கூறுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் அதற்கேற்றாற்போல் அந்த கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் தண்ணீர் அசுத்தமாக வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் இந்த கிராமத்தில் கழிவுநீர் முறையாக செல்ல வடிகால் இல்லாத காரணத்தால் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றது. அதன்மூலம் நோய் பரவி வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தங்களது கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து மஞ்சள் காமாலை நோயை கட்டுக்குள் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story