எல்லப்பாளையம் ஏரியில் படகு சவாரி தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


எல்லப்பாளையம் ஏரியில் படகு சவாரி தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 13 Oct 2019 9:30 PM GMT (Updated: 13 Oct 2019 7:16 PM GMT)

எல்லப்பாளையம் ஏரியில் படகு சவாரி தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வில்லரசம்பட்டி கருவில்பாறைவலசு பகுதியில் எல்லப்பாளையம் ஏரி அமைந்து உள்ளது. 26.65 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. ஏரி முழுவதும் பாறையாக இருந்ததால் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை காணப்பட்டது.

இந்த ஏரிக்கு கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும், மழை தண்ணீரும் வரும். எனவே வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்போது ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது.

இந்தநிலையில் எல்லப்பாளையம் ஏரியை தூர்வாரி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, நடைபாதை, பூங்கா, படகு சவாரி போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. அதன்பின்னர் ஏரியில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டது. பின்னர் ஏரியில் உள்ள மண் அள்ளப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன.

மேலும், ஏரிக்கு தண்ணீர் வரத்து ஏற்படும் பகுதியில் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டது. தற்போது குளம் முழுமையாக தூர்வாரப்பட்டு உள்ளது. மேலும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஏரிக்கு நீர் வரத்து ஏற்பட்டது. தற்போது ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

ஏரியை சுற்றிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான தளம் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக பூங்காவுக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து சென்று வருகிறார்கள். மேலும், ஏரியில் படகு சவாரி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் படகு சவாரி முறையாக செயல்படுத்தப்படாமல் இருப்பதால், அங்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், படகு சவாரி தொடங்கப்படும் இடத்திற்கு அருகில் உள்ள படித்துறையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

எனவே எல்லப்பாளையம் ஏரியில் படகு சவாரியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் சுற்றுவட்டார பகுதியில் பொழுதுபோக்குவதற்காக சிறந்த இடம் எதுவும் இல்லை. இதனால் எல்லப்பாளையம் ஏரி சீரமைக்கப்பட்டதும், நாங்கள் அதிக எதிர்பார்ப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தோம். படகு சவாரிக்காக 2 படகுகள் உள்ளன. அந்த படகுகளை விடுமுறை தினங்களிலாவது இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. எனவே குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து ஏரியில் படகு சவாரியை தொடங்க ேவண்டும்.

ஏரிக்கு அருகில் சுடுகாடு பகுதியில் தண்ணீர் குளம்போல தேங்கி நிற்கிறது. அங்கு கொசு அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு பரவும் அபாயமும் உள்ளது. இதேபோல் பல இடங்களில் உரிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. எனவே புதுப்பொலிவுடன் காணப்படும் ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story