ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர் விடுதிகளின் சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர் விடுதிகளின் சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2019 10:45 PM GMT (Updated: 13 Oct 2019 8:00 PM GMT)

ஆதிதிராவிடர்- பழங்குடியினர் மாணவர்கள் விடுதிகளின் சீர்கேட்டை கண்டித்து வருகிற 18-ந்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்திந்திய மாணவர் பெருமன்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் நல்லசுகம், மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் பாரதசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கட்டாய இந்தி திணிப்பை அமல்படுத்தும் வகையில் கல்வி நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அஞ்சலகம், வங்கிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் இந்தி மொழியில் எழுதப்படுவதற்கும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பெயர் பலகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதற்கும் கண்டனம் தெரிவிப்பது.

உள் ஒதுக்கீடு

மத்திய பல்கலைக்கழகம் முழுவதும் உள்ள பெயர் பலகைகள், அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழியில் எழுதப்படுவதை கட்டாயமாக்க கோருவது. மாணவர் சேர்க்கையில் திருவாரூர் மாவட்ட மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். திருத்துறைப்பூண்டி, குடவாசல் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மாணவர் விடுதி தொடங்க வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் விடுதிகளின் சீர்கேட்டை கண்டித்து வருகிற 18-ந் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story