கிராண்ட் ரோடு அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ - வாலிபர் பலி: தீயணைப்பு வீரர்கள் காயம்
கிராண்ட் ரோடு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வாலிபர் பலியானார். தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
மும்பை,
மும்பை கிராண்ட் ரோடு கிழக்கு, டிரீம்லேண்டு தியேட்டர் அருகில் ஆதித்யா ஆர்கடே டோபிவாலா என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 5 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் கடைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. மேல் தளத்தில் வீடுகள் உள்ளன.
இந்தநிலையில் நேற்று காலை 6 மணியளவில் திடீரென கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மின்மீட்டர்களில் தீப்பிடித்தது. இதையடுத்து கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
இந்தநிலையில் கட்டிடத்தில் தீப்பிடித்தவுடன் வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த குடியிருப்புவாசிகள் மேல்மாடிகளுக்கு பதறி அடித்து கொண்டு ஓடினர். இந்த நேரத்தில் அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் முதலில் கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அவர்கள், 2-வது மாடியில் சிக்கியிருந்த 2 பேரை ராட்சத ஏணியை பயன்படுத்தி மீட்டனர். மேலும் அவர்கள் 4-வது மாடியில் இருந்து 3 பேரையும், மொட்டை மாடியில் இருந்து 4 பேரையும் மீட்டனர்.
இதில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் சுதன் கோரே உள்பட 6 பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல கையில் லேசான வெட்டு காயமடைந்த தீயணைப்பு வீரர் நந்தகுமார் வாயலும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தநிலையில் கட்டிடத்தில் எரிந்த தீ மளமளவென மேல்மாடிகளுக்கும் பரவி அதிகளவில் கரும்புகை வெளியேற தொடங்கியது. இதையடுத்து 10 தீயணைப்பு வாகனங்கள், 4 அதிவிரைவு மீட்பு வாகனங்கள், மீட்பு வேன், 10 ராட்சத தண்ணீர் டேங்கர்கள், 15 தண்ணீர் டேங்கர்கள், 2 மடக்கு ஏணிகள் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டன. சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தநிலையில் கட்டிடத்தின் மாடிப்படி அருகில் மயங்கிய நிலையில் உத்தம்குமார் (வயது23) என்ற வாலிபர் மீட்கப்பட்டார்.
அவர் உடனடியாக ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உத்தம்குமார் தீ விபத்து நடந்த உடன், மேல்மாடிக்கு தப்பி செல்ல முயன்ற போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story