கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல் - மினிவேன் டிரைவர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து அரக்கோணத்திற்கு கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 1¾ டன் குட்காவை டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம்,
கர்நாடக மாநிலத்தில் இருந்து அரக்கோணத்திற்கு இரவு நேரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அவர்களின் உத்தரவின்பேரில் அரக்கோணம் நகரம், தாலுகா பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, தேவபிரசாத் மற்றும் போலீசார் அரக்கோணம், எஸ்.ஆர்.கேட் பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி ஒரு மினிவேன் வேகமாக வந்தது. போலீசார் அந்த மினிவேனை மடக்கினார்கள். உடனே வேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓட முயற்சித்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் மினிவேனின் பின்பக்கம் திறந்து பார்த்தபோது 80 கோணிப்பை, அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி சென்றது தெரிய வந்தது. டிரைவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜீலூர் மாவட்டத்தை சேர்ந்த அரிராம்ஜி என்பவரின் மகன் ராஜூராம் (வயது 26) என்பதும், கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே அத்திப்பல்லி பகுதியில் இருந்து அரக்கோணத்தில் உள்ள டீலரிடம் குட்கா கொடுப்பதற்காக வந்ததும் தெரிய வந்தது.
மேலும் டீலர் யார் என்று தனக்கு எதுவும் தெரியாது. அரக்கோணத்திற்கு குட்காவை கொண்டு சென்று விடு, அங்கு டீலர்கள் வந்து வாங்கி சென்று விடுவார்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர் என்று விசாரணையின்போது ராஜூராம் கூறினார்.
இது தொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூராமை கைது செய்தனர். மேலும் 1¾ டன் குட்காவை மினிவேனுடன் பறிமுதல் செய்தனர்.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரக்கோணத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரக்கோணம் வழியாக தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்த சில மணி நேரங்களில் டவுன் போலீசார் வாகன தணிக்கை செய்து பறிமுதல் செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த அரக்கோணம் டவுன் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story