மினிலாரி மீது சரக்கு வாகனம் மோதல்: 3 மாணவர்கள் உடல் நசுங்கி பலி - கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்


மினிலாரி மீது சரக்கு வாகனம் மோதல்: 3 மாணவர்கள் உடல் நசுங்கி பலி - கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 13 Oct 2019 11:00 PM GMT (Updated: 13 Oct 2019 10:36 PM GMT)

திருக்கோவிலூர் அருகே மினிலாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உடல் நசுங்கி பலியாகினர். கோவிலுக்கு சென்றபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள லாலாபேட்டையை சேர்ந்தவர் குப்பன் மகன் சந்திரன் (வயது 20), டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலருடன் சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி சந்திரன் நேற்று காலை ஒரு சரக்கு வாகனத்தில் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு புறப்பட்டார்.

திருக்கோவிலூர் அருகே கடம்பூரில் உள்ள வளைவில் திரும்பிய போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் தறிகெட்டு ஓடியது. அப்போது எதிரே காலி கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த மினிலாரி மீது சரக்கு வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.

இந்த விபத்தில் சரக்கு வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சரக்கு வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கிய லாலாபேட்டையை சேர்ந்த அய்யப்பன் மகன் தமிழரசன்(13), முருகேசன் மகள் மகாலட்சுமி(17), கருணாநிதி மகன் பொன்மனச்செல்வன்(13) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர்.

மேலும் அதே ஊரைச்சேர்ந்த சுந்தரம் மகன் பாண்டித்துரை(14), வேல்முருகன் மகள் சந்தியா(14), ஆறுமுகம் மகன் தனுஷ்(10), சின்னதம்பி மகன் அண்ணாதுரை(20), ஏழுமலை மகன் பூவரசன்(14), வேல்முருகன் மகள் ஷாலினி(9), ஏழுமலை மகன் அய்யனார்(9) உள்ளிட்ட 11 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 11 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தில் டிரைவர் சந்திரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

தொடர்ந்து விபத்தில் பலியான தமிழரசன், மகாலட்சுமி, பொன்மனச்செல்வன் ஆகிய 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இதுகுறித்து அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து, பலியான 3 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். விபத்தில் பலியான தமிழரசன் லாலாபேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பும், பொன்மனச்செல்வன் 8-ம் வகுப்பும், மகாலட்சுமி கீழ்பாடியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் லாலாபேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story