திருவெண்ணெய்நல்லூர் அருகே, மினி லாரியில் கடத்திய ரூ.7 லட்சம் மதுபாட்டில்கள், எரிசாராயம் பறிமுதல் - டிரைவர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் எரிசாராய கேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
அரசூர்,
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து திருவெண்ணெய்நல்லூர் பகுதி வழியாக மதுபாட்டில்கள், எரிசாராயம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், அகிலன் மற்றும் போலீசார் மேல்தணியாலம்பட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு மினிலாரியை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தபோது, அதில் 4,800 மதுபாட்டில்களும், 30 கேன்களில் 1,580 லிட்டர் எரிசாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மினிலாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், விழுப்புரம் அருகே பரசுரெட்டிப்பாளையத்தை சேர்ந்த ரவி மகன் அசோக் (வயது 25) என்பதும் புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிக்கு மதுபாட்டில்கள் மற்றும் எரிசாராயத்தை கடத்திவந்தபோது பிடிபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அசோக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் மற்றும் எரிசாராயத்தையும் மேலும் இவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மதுபாட்டில்கள், எரிசாராயத்தின் மதிப்பு ரூ.7 லட்சமாகும். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து, பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், எரிசாராயத்தை பார்வையிட்டதோடு, இவற்றை பறிமுதல் செய்த போலீசாரை பாராட்டினார்.
Related Tags :
Next Story