கடலூரில் 2,500 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் - அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்


கடலூரில் 2,500 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் - அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
x
தினத்தந்தி 14 Oct 2019 4:15 AM IST (Updated: 14 Oct 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடைபெற்ற விழாவில் 2,500 ஏழை பெண்களுக்கு ரூ.9 கோடியே 64 லட்சத்து 75 ஆயிரம் திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர், 

சமூகநலத்துறை சார்பில் ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைகேட்பு கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். சமூகநலத்துறை அதிகாரி அன்பழகி வரவேற்றார்.

விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 2 ஆயிரத்து 500 ஏழை பெண்களுக்கு ரூ.9 கோடியே 64 லட்சத்து 75 ஆயிரம் நிதி உதவியுடன் 20 கிலோ தங்கத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

ஏழை பெண்களின் திருமணத்துக்கு நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும். பெண்களிடத்தில் புரட்சி வந்தால்தான் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும்.

ஏழை பெண்களின் திருமணத்துக்கு நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 42 ஆயிரத்து 405 பயனாளிகளுக்கு ரூ.142 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரம் உதவிதொகையுடன் 211 கிலோ 208 கிராம் தங்கம் நாணயங்களாக வழங்கப்பட்டுள்ளன.

இன்று(அதாவது நேற்று) நடைபெற்ற விழாவில் 2,500 ஏழை பெண்களுக்கு தலா ஒரு பவுன் வீதம் 20 கிலோ தங்கம் மற்றும் ரூ.9 கோடியே 64 லட்சத்து 75 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த 1,359 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரம் உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த 1,141 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், ரூ.2 கோடியே 85 லட்சத்து 25 ஆயிரம் உதவித்தொகை, தலா ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

சிலருக்கு தங்கம் வாங்குவதை நினைத்து கூட பார்க்க முடியாது. அதுபோன்ற ஏழைகளுக்கு தங்கம் வாங்குகின்ற சக்தியை கொடுக்கிற அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. இதற்கு காரணமானவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கடலூர் நகரசபை முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கமணி, காசிநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்செல்வன், அன்பு, கந்தன், எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சமூகநலத்துறை பாதுகாப்பு அதிகாரி ஆண்டாள் நன்றி கூறினார்.

Next Story