சேலத்தில், தீத்தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்


சேலத்தில், தீத்தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Oct 2019 3:45 AM IST (Updated: 14 Oct 2019 5:46 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

சேலம்,

சர்வதேச பேரிடர் தணிப்பு தினத்தையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தீத்தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் தீ விபத்தை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் ராமன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம், வள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. மேலும், தீ விபத்தை தடுப்பது குறித்தும், மழை காலங்களில் பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இதைத்தொடர்ந்து தீ விபத்தினை தடுப்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ராமன் கூறியதாவது:-

சர்வதேச பேரிடர் தணிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் வெள்ள காலங்களில் மனிதர்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். எதிர்பாராதவிதமாக ஏற்படுகின்ற தீ விபத்துகள், சாலை விபத்துகள், கட்டிட விபத்துகள், கட்டிட இடுபாடுகள், இயற்கையின் சீற்றங்களால் ஏற்படுகின்ற புயல், மழை, வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பல்வேறு பாதிப்புகளிலிருந்தும், செயற்கையாக ஏற்படுகின்ற பேரிடர் பாதிப்புகளிலிருந்தும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தீ விபத்தினை தடுப்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியை மாணவ, மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்வதோடு, தங்களது வீடுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என்பதை அறிய வேண்டும். பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி இதுகுறித்த விழிப்புணர்வை அவர்களுக்கும் ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முன்னதாக, வரும் முன் காப்போம், பேரிடர் தவிர்ப்போம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி மற்றும் வளங்களை காப்போம், பேரிடர் குறைப்போம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ராமன் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணே‌‌ஷ்மூர்த்தி, உதவி கலெக்டர் மாறன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் விஜயகுமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் பத்மபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story