ஓட்டப்பிடாரம் அருகே, தொழிலாளி அடித்துக் கொலை? போலீசார் தீவிர விசாரணை


ஓட்டப்பிடாரம் அருகே, தொழிலாளி அடித்துக் கொலை? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 13 Oct 2019 10:15 PM GMT (Updated: 14 Oct 2019 12:16 AM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை அன்னலட்சுமி நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது 65). ஓய்வு பெற்ற துறைமுக ஊழியர். இவருடைய மகன் விமல்ராஜ்(35). கூலித் தொழிலாளி. இவருக்கு சுடலைக்கனி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர் கடந்த 11-ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் அவரது வீட்டுக்கு ஒரு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவில் மர்ம ஆசாமிகள் 5 பேர் விமல்ராஜை அழைத்து வந்தனர். அவர்கள் வீட்டின் முன்பு விமல்ராஜை இறக்கி விட்டு விட்டு வேகமாக ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர். அப்போது சட்டை கிழிந்த நிலையில் சற்று மயங்கிய நிலையில் அவர் இருந்தது. தொடர்ந்து வீட்டுக்குள் தள்ளாடியவாறு சென்ற அவர், திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து விமல்ராஜின் மனைவி சுடலைக்கனி ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி, சப்-இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விமல்ராஜின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி அருகே ஒரு ஆட்டோ எரிந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆட்டோ அருகே விமல்ராஜின் ஆதார் அட்டை கிடந்தது.

இதனால் விமல்ராஜ் ஆட்டோவை எரித்து இருக்கலாம் என்று சந்தேகித்த, ஆட்டோ உரிமையாளர், அவரை கடத்தி சென்று கூட்டாளிகளுடன் சேர்ந்து அடித்து சாகும் தருவாயில் வீட்டில் வந்து இறக்கி விட்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story