தாய்-தந்தையுடன் வந்தபோது பஸ்நிலையத்தில் மாயமான சிறுவன் - பொதுமக்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்


தாய்-தந்தையுடன் வந்தபோது பஸ்நிலையத்தில் மாயமான சிறுவன் - பொதுமக்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 14 Oct 2019 3:30 AM IST (Updated: 14 Oct 2019 5:47 AM IST)
t-max-icont-min-icon

தாய்-தந்தையுடன் வந்தபோது சங்ககிரி பஸ்நிலையத்தில் சிறுவன் மாயமானான். பொதுமக்கள் அந்த சிறுவனை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம், 

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 43). கட்டிடத்தொழிலாளி. இவர் தனது மனைவி எல்லம்மாள் (35), மகன் ஜெகன் (5) ஆகியோருடன் ஈரோடு செல்ல முடிவு செய்தார். இதற்காக நேற்றுமுன்தினம் 3 பேரும் சேலம் வந்தனர். அங்கிருந்து ஈரோட்டுக்கு செல்ல பஸ்சில் ஏறினர். செல்லும் வழியில் எல்லம்மாளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் சங்ககிரி பஸ்நிலையத்திற்கு இரவு 9 மணியளவில் பஸ் வந்ததும் 3 பேரும் கீழே இறங்கினர். அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல தயாராக நின்றனர். அப்போது சிறுவன் ஜெகனை காணவில்லை. இதனால் பதறிப்போன தாயும், தந்தையும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எல்லம்மாளுக்கு மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சாம்பசிவம் அவரை அழைத்து கொண்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மனைவிக்கு சிகிச்சை பெற செய்தார்.

இந்தநிலையில் சங்ககிரி பழைய பஸ்நிலையம் அருகே இரவு 10 மணியளவில் தனியாக சுற்றிக்கொண்டு இருந்த சிறுவன் ஜெகனை மீட்டு சங்ககிரி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் மனைவியுடன் சாம்பசிவம் சங்ககிரி பஸ்நிலையத்திற்கு வந்தார். அங்கு மீண்டும் மகனை தேடிப்பார்த்தார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன்பின்னர் நேற்று காலை சாம்பசிவம் தனது மனைவியுடன் சங்ககிரி போலீஸ் நிலையத்துக்கு புகார் செய்ய சென்றார். அங்கு சிறுவன் ஜெகன் இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது சிறுவன் ஓடி வந்து தாயை கட்டிப்பிடித்து அழுதான். அதன்பிறகு போலீசார் எச்சரிக்கை செய்து சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story