திண்டிவனம் அருகே, ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்


திண்டிவனம் அருகே, ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 14 Oct 2019 9:30 PM GMT (Updated: 14 Oct 2019 2:39 PM GMT)

திண்டிவனம் அருகே ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

திண்டிவனம்,

காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் சிவச்சந்திரன்(வயது 32). இவர் குடும்பத்துடன் சென்னை நங்கநல்லூர் வி.வி.நகரில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சிவச்சந்திரன் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செல்ல முடிவு செய்தார். அதன்படி அவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் சென்றதோடு, சாமியை தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் நேற்று அதிகாலை அரசு பஸ் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோ‌ஷணை போலீஸ் நிலையம் அருகே வந்தபோது, சிவச்சந்திரன் திடீரென மார்பை பிடித்துக் கொண்டு இருக்கையில் இருந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த பஸ்சில் வந்த சக பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த பஸ் ரோ‌ஷணை போலீஸ் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிவச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிவச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ரோ‌ஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story