கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த மழை, ஏரிச்சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது
கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த மழையால் ஏரிச்சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் பரவலாக மழை பெய்தது. பின்னர் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அப்சர்வேட்டரியில் 76.2 மில்லி மீட்டர் மழையும், போட் கிளப்பில் 64 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
கன மழை எதிரொலியாக நட்சத்திர ஏரியை சுற்றி அதிகளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அங்கு நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் சிரமப்பட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடையில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மழையால் ஏரிச்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அத்துடன் நடைபயிற்சி சென்றவர்களும் பாதிக்கப்பட்டனர். எனவே ஏரியில் இருந்து உபரிநீரை திறந்துவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் பலத்த மழை காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 16 அடியாகவும் (மொத்த உயரம் 21 அடி), புதிய அணையின் நீர்மட்டமும் ஒரு அடி உயர்ந்து 24 அடியாகவும் (மொத்த உயரம் 36 அடி) காணப்பட்டன. மேலும் பியர்சோழா அருவி, பாம்பார் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
Related Tags :
Next Story