கோவையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவகாரம்: கைதான கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம்


கோவையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவகாரம்: கைதான கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 15 Oct 2019 3:15 AM IST (Updated: 15 Oct 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கில் கைதான கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவை காந்திபார்க் ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு கடைக்கு கடந்த 12-ந் தேதி 2 வாலிபர்கள் சென்றனர். அவர்கள் குளிர்பானம் வாங்குவதற்காக கடைக்காரரிடம் 100 ரூபாய் நோட்டை கொடுத்தனர். அதை வாங்கியபோது, கையில் சாயம் ஒட்டியது. இதனால் சந்தேகம் அடைந்த கடைக்காரர், அந்த ரூபாய் நோட்டை சோதித்து பார்த்த போது அது, கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

உடனே அந்த வாலிபர்கள் குளிர்பானத்தை வாங்கிக்கொண்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கடைக்காரர் பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவா்கள் ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கே.கே. நகரை சேர்ந்த பூபதி (வயது 26), தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (23) என்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்தும் 100 ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த கும்பலுக்கு தலைவர்களாக விருதுநகரை சேர்ந்த தன்ராஜ் (32), கோவை கணபதியை சேர்ந்த ரஞ்சித் (27) ஆகியோர் செயல்பட்டதும், அவர்கள் இடிகரை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதும், இதில் கள்ள ரூபாய் நோட்டுகளை தன்ராஜ் அச்சடித்து கூட்டாளிகள் மூலம் புழக்கத்தில் விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே தன்ராஜை வாடகைக்கு அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், அங்கு ஒரு அறையில் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரம், பேப்பர், மை, 2 கலர் ஜெராக்ஸ் எந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கு அச்சடித்து புழக்கத்தில் விடுவதற்காக வைத்து இருந்த ரூ.11 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள 2000, 500, 200, 100, 50 ரூபாய் கள்ளநோட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து போலீசார் தன்ராஜ் வசித்து வந்த வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனர். தன்ராஜ் கொடுத்த தகவலின் பேரில் கணபதியை சேர்ந்த ரஞ்சித் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கும்பல் கள்ள நோட்டுகளை அச்சடித்து கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங் களில் புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ள நோட்டு கும்பலுக்கு தன்ராஜ் தான் தலைவனாக இருந்து உள்ளார். இந்த வழக்கில் கோவையை சேர்ந்த மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைதான கள்ளநோட்டு கும்பல் தலைவன் தன்ராஜ் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எனது சொந்த ஊர் விருதுநகர். நான் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு கள்ளநோட்டுகளை அச்சடித்த போது ஏற்கனவே போலீசில் சிக்கி சிறைசென்றுள்ளேன். பின்னர் வெளியே வந்த போது சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி கோவை வந்தேன். அப்போது கணபதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாங்கள் கார், பங்களாவுடன் வசதியாக வாழ ஆசைப்பட்டோம். ஏற்கனவே எனக்கு கள்ள நோட்டுகளை அச்சடித்து வெளியிட்ட அனுபவம் இருந்ததால் மீண்டும் கள்ள நோட்டுகளை அச்சடித்து தொழில்நகரமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் புழக்கத்தில் விட்டால் யாருக்கும் தெரியாது என்று எண்ணினோம்.

அதன்படி இடிகரையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்தோம். பின்னர் புதிய அசல் ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து, அவற்றை கணினியில் பதிவு செய்து அவற்றை அசல் ரூபாய் நோட்டுகளை போன்று பிரிண்ட் எடுத்தோம். அசல் ரூபாய் நோட்டின் நடுவே இருக்கும் கோடுக்கு நாங்கள் நிறத்துக்கு ஏற்ப கிப்ட் பேப்பரை சிறியதாக வெட்டி அதில் ஒட்டிவிடுவோம்.

பின்னர் அவற்றை நன்றாக காய வைத்து புழக்கத்தில் விடுவோம். இதற்காக அந்த பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்தால் பாதிக்குப்பாதி பணம் தருவதாக கூறி ஏஜெண்டுகளை நியமித்தோம். அவர்கள் மூலம் கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்கும் எந்திரம் இல்லாத கடை, இரவு நேர ஓட்டல்கள், மதுபானக்கடைகளில் புழக்கத்தில் விட்டோம். தற்போது போலீசில் சிக்கிக்கொண்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story