தலைஞாயிறு-கீழையூரில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு


தலைஞாயிறு-கீழையூரில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Oct 2019 11:00 PM GMT (Updated: 14 Oct 2019 7:03 PM GMT)

தலைஞாயிறு மற்றும் கீழையூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்,

தலைஞாயிறு மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் ரூ.52 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கீழையூர் ஒன்றியம் மகிழி கிராமத்தில் ரூ.6 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளையாற்றில் கட்டப்பட்டு வரும் புதிய கடைமடை இயக்கு அணையின் கட்டுமான பணிகளையும், தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடி பகுதியில் ரூ.3 கோடியே 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் கட்டுமான பணிகளையும், காடந்தேத்தி கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் அரிச்சந்திரா நதி புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை மறுகுடியேற்றும் திட்டத்தில் ரூ.22 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 190 வீடுகளின் கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

கட்டுமான பணிகள்

அதைத்தொடர்ந்து தலைஞாயிறு முதலியப்பன்கண்டி பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் ரூ.7 கோடியே 5 லட்சம் மதிப்பில் அரிச்சந்திரா நதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைமடை இயக்கு அணையின் கட்டுமான பணிகளையும், கள்ளிமேடு பகுதியில் ரூ.13 கோடி மதிப்பில் அடப்பாற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைமடை இயக்கு அணையின் கட்டுமான பணிகளையும் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) ஆசைத்தம்பி, உதவி செயற்பொறியாளர் பாண்டியன், செயற்பொறியாளர் (சிறப்பு திட்ட கோட்டம்) தங்கராஜ், தாசில்தார்கள் சண்முகம் (வேதாரண்யம்), கபிலன்(கீழ்வேளூர்) உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story