கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மஞ்சூர்,
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் பச்சை தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருமானம் ஈட்டி வருகின்றனர். அதன்படி விவசாயிகள் வினியோகிக்கும் பச்சை தேயிலைக்கு 15 கூட்டுறவு தொழிற்சாலைகளில் மாதாந்திர விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கட்டபெட்டு கூட்டுறவு தொழிற்சாலையில் மட்டும் வாராந்திர விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
முந்தைய மாதம் குன்னூர் ஏல மையத்தில் விற்பனை செய்யப்பட்ட தேயிலைத்தூளின் சராசரி விலையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் மேலாண்மை இயக்குனர்கள் முன்னிலையில் இன்கோ சர்வ் நிர்வாகம் மாதாந்திர விலை நிர்ணயம் செய்கிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்துக்கான மாதாந்திர விலை நிர்ணயம் குறித்து இன்கோ சர்வ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி பிக்கட்டி, கைக்காட்டி, மேற்குநாடு, இத்தலார், நஞ்சநாடு, கிண்ணக்கொரை, மகாலிங்கா, கரும்பாலம், எப்பநாடு, பிதிர்காடு, பிராண்டியர் ஆகிய கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.10, மஞ்சூர், குந்தா, சாலீஸ்பரி ஆகிய கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.11, பந்தலூர் கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.10.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நடப்பாண்டில் கடந்த மே மாதம் வரை கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15-க்கு குறையாமல் மாதாந்திர விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன்பிறகு தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த செப்டம்பர் மாதம் கிண்ணக்கொரை கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்த பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.10 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலையை கொண்டு உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு செலவை மட்டுமே சமாளிக்க முடியும். மேலும் தொழிலாளர்களுக்கு கூலி மற்றும் குடும்ப செலவுகளை பூர்த்தி செய்ய முடியாது. விலை வீழ்ச்சியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே கட்டுப்படியான விலை கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் அதுவரை நிவாரண உதவி தர அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story