மத்திய அரசின் திட்டங்களை முடக்கி வைத்திருப்பவர் நாராயணசாமி - பாரதீய ஜனதா புகார்


மத்திய அரசின் திட்டங்களை முடக்கி வைத்திருப்பவர் நாராயணசாமி - பாரதீய ஜனதா புகார்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:30 PM GMT (Updated: 14 Oct 2019 8:20 PM GMT)

மத்திய அரசின் ஒட்டுமொத்த திட்டங்களையும் நாராயணசாமி முடக்கி வைத்துள்ளார் என்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி பா.ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் பதவி மிகவும் மதிப்பான பதவி. அந்த பதவியை கொச்சைப்படுத்தும் விதமாக கவர்னரை பெண் என்றும் பாராமல், கேவலப்படுத்தும் விதமாக கவர்னரை தரம் தாழ்ந்த பெண்மணி என்று கூறியுள்ளார். அவருடைய பேச்சை பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தேர்தல் பிரசாரத்தில் வளர்ச்சியையும், திட்டத்தையும் கூறாமல் பொய்களை கூறி கடந்த எம்.பி. தேர்தலில் கிரண்பெடியை காரணம் காட்டி மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற்றனர். மத்திய அரசின் ஒட்டுமொத்த திட்டங்களையும் முடக்கி வைத்திருப்பவர் நாராயணசாமி தான்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு டோக்கன் வழங்கிவிட்டு அதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தாமல் புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்.

மக்கள் வரிப்பணத்தில் வாகனத்திற்கு ரூ.ஒரு லட்சத்திற்கு டீசல் போட்டதாக சொல்கிறார்கள். சட்டமன்றத்தில் ரூ.3 கோடிக்கு தேனீர் மற்றும் இதர செலவு செய்ததாக கூறுகிறார்கள். ஆட்சியாளர்களின் துணையோடு கஞ்சா விற்பனை நடக்கிறது. கொலை, கொள்ளை நடைபெறுவதை தடுக்க முடியவில்லை. ஊழல் புகார் குற்றங்களுக்கான அதிகாரபூர்வமான ஆர்.டி.ஐ. காங்கிரஸ் மீது கவர்னரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கவர்னர் கிரண்பெடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி தேர்தல் துறையினர், கணக்கு காட்டப்படாத ஊழல் பணத்தை தேர்தலுக்காக பயன்படுத்துபவர்கள் மீது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாநிலத்திலும் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டு ஊழல் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story