குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வாங்கப்பாளையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கக்கோரி பொதுமக்கள் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வாங்கப்பாளையத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 14 Oct 2019 10:45 PM GMT (Updated: 14 Oct 2019 8:25 PM GMT)

கரூர் அருகே வாங்கப்பாளையத்தில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் பா.ஜ.க. வின் கரூர் நகர தலைவர் செல்வன், பிற்படுத்தப்பட்டோர் அணி நகர பொது செயலாளர் ஆறுமுகம் மற்றும் கரூர் வாங்கப்பாளையம் பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், கரூர் வாங்கப்பாளையத்தில் இறைச்சி கடைகள் சாலையோரமாக அதிகளவில் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அந்த பகுதியில் ஆங்காங்கே கொட்டப்பட்டு கிடப்பதால், அதனை உண்பதற்காக தெருநாய்கள் அடிக்கடி சண்டையிட்டு கொள்கின்றன. இதனால் அப்பகுதியில் நடந்து செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டியிருக்கிறது. எனவே கேட்பாரற்று சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இறைச்சி கடைகளை அப்புறப்படுத்தி ஒதுக்குப்புறமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். வாங்கப்பாளையம் பகுதி மக்கள் முன்பு வாங்கப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்து வந்தோம். ஆனால் தற்போது வி.வி.ஜி. நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றி விட்டார்கள். இது தொலைவில் இருப்பதால், வாங்கப்பாளையம் உயர்நிலைப்பள்ளியிலேயே வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

பொம்மை லாரியில் மணலுடன் வந்து மனு

கிரு‌‌ஷ்ணராயபுரம் மேலக்காரத்தெருவை சேர்ந்த அமிர்தானந்தம் என்பவர் அளித்த மனுவில், மேட்டுத்திருக்காம்புலியூரில் லாரியில் சிலர் திருட்டு மணல் அள்ளுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இதனால் இயற்கை வளம் சுரண்டப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மணல் திருட்டு தொடர்பாக வீடியோ ஆதாரம் சேகரித்த என்னை கொலை செய்து விடுவதாக சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் பொம்மை லாரியில் மணலை எடுத்து கொண்டு கயிறு மூலம் அதனை இழுத்த படியே கலெக்டர் அலுவலகத்தினுள் அமிர்தானந்தம் நுழைய முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, பொம்மை லாரியை இங்கேயே வைத்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

குண்டும்-குழியுமான சாலை

கரூர் அருகே வாங்கல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கொடுத்த மனுவில், பட்டியல் பிரிவில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க மானுடவியல் ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு மாநில அரசு விரைந்து அனுப்பிட வேண்டும். அதற்குரிய அரசாணையை விரைவில் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

கரூர் அருகே பவித்ரம் கிராமம் மருதகாளியம்மன் கோவில் நடைமுறை அறங்காவலர் சண்முகம் உள்ளிட்டோர் அளித்த மனுவில், எங்களது கோவில் நிலத்தில் குடிசை அமைக்க முற்படுவது போன்ற ஆக்கிரமிப்பு செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

கடவூர் வடம்பாடி ஆதிதிராவிடர் காலனியில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. எனவே அதனை சீரமைத்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு பாராட்டு

கூட்டத்தில், மண்மங்கலம் வட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஹரிகரசுதன் என்பவர் கிணற்றில் விழுந்து இறந்ததால் அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையையும், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பாக, எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் மாவட்ட அளவில் சிறந்த பணியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உலக அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட பிரிவில் இந்தியா கலந்துகொண்டு உலக அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. இந்த சிலம்பாட்ட பிரிவில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் நேரில் அழைத்து பாராட்டினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை கலெக்டர் பாலசுப்ரமணியன், கலால் பிரிவு உதவி ஆணையர் மீனாட்சி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story