கடலூர் மாவட்டத்தில், 1¾ லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தீவிரம்


கடலூர் மாவட்டத்தில், 1¾ லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 15 Oct 2019 4:00 AM IST (Updated: 15 Oct 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் 1¾ லட்சம் பனைவிதைகள் விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடலூர், 

தமிழக அரசின் மரமாக பனைமரம் உள்ளது. இலக்கியத்தில் பனை மரத்தை கற்பகத்தரு என்று அழைக்கின்றனர். பனைமரங்கள் கடுமையான வறட்சியை தாங்கி வளரக்கூடியவை. பனை மரங்களின் வேர்கள் நிலத்தடி நீரை நிலத்தின் மேற்பகுதிக்கு கொண்டு வருவதால் பனை மரங்கள் உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையாது என கண்டறியப்பட்டுள்ளது. அதோடு பனைமரங்கள் காற்றுத்தடுப்பானாகவும் மண் அரிப்பு தடுப்பானாகவும் பயன் படுகிறது. இதனால் பனைமரங்களை பேணிப்பாதுகாக்கும் வகையில் அரசு புறம்போக்கு நிலங்கள், கடற்கரை, ஆறுகள், மற்றும் ஏரி, குளம், குட்டைகளின் கரைகளில் தோட்டக்கலைத்துறை மூலம் பனைவிதைகள் விதைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தோட்டக்கலைத்துறை மூலம் 1¾ பனை விதைகள் விதைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர் வட்டாரத்தில் தென்னம்பாக்கம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜாமணி தலைமையில் வட்டார வளர்ச்சி அதிகாரி குமரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் குளக்கரையில் பனைவிதைகள் நடப்பட்டன. இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பழனிசாமி, பிரேம்குமார், தென்னம்பக்கம் ஊராட்சி செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story