சிதம்பரம் அருகே, பாசன வாய்க்காலை தூர்வாராததால் கிராமத்தை சூழ்ந்த வீராணம் நீர் - தண்ணீர் வீணாவதால் விவசாயிகள் வேதனை
சிதம்பரம் அருகே பாசன வாய்க்காலை தூர்வாராததால் வீராணம் நீர், கிராமத்தை சூழ்ந்து வீணானது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
சிதம்பரம்,
லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 16 கிலோ மீட்டர் நீளம், 5.6 கிலோ மீட்டர் அகலம், 48 கிலோ மீட்டர் சுற்றளவு என பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. அதேசமயம் கடந்த ஆகஸ்டு மாதம் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணையை நிரப்பியது. பின்னர் அங்கிருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர் மேலணை, கீழணை, வடவாறு வழியாக வீராணம் ஏரியை நிரப்பியது. கடல்போல் காட்சி அளிக்கும் இந்த ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு தேவைக்கு ஏற்ப வினாடிக்கு 40 முதல் 65 கனஅடி வரை குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த மாதம் 10-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் பிரதான பாசன வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் முறையாக தூர்வாராத காரணத்தால் இது வரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்றும், இதனால் சம்பா சாகுபடி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் விவசாயிகள் புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில் பாசன வாய்க்காலை தூர்வாராததால் வீராணம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கிராமத்தை சூழ்ந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
சிதம்பரம் அருகே உள்ள காட்டுகூடலூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். வீராணம் ஏரியில் இருந்து ராஜன்வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர், கிளை வாய்க்கால் மூலம் காட்டுகூடலூர் கிராமத்திற்கு வருகிறது. ஆனால் இந்த கிளை வாய்க்கால் முறையாக தூர்வாரப்படவில்லை.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையினர் இந்த வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பாதியளவு மட்டுமே தூர்வாரியுள்ளனர். மீதமுள்ள வாய்க்கால் பகுதி தூர்வாரப்படவில்லை. அந்த வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக வீராணம் ஏரி நீர், இந்த வாய்க்காலில் செல்லமுடியாமல் தேங்கி நின்றது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் வாய்க்கால் நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு காட்டுகூடலூர் கிராமத்தை சூழ்ந்தது. சில குடிசைகளுக்குள் புகுந்ததால், மக்கள் அவதி அடைந்தனர். கிராமத்தை சூழ்ந்திருந்த தண்ணீரில் இறங்கி, சிறுவர்கள் விளையாடினர்.
கடைமடைபகுதிக்கு வீராணம் ஏரி நீர் செல்லாத நிலையில், வாய்க்கால் நிரம்பி கிராமத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கி வீணாவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இந்த வாய்க்காலை தூர்வாரி, வீராணம் ஏரி நீர் விளைநிலத்துக்கு செல்ல பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story