மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.50 லட்சம் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.50 லட்சம் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Oct 2019 10:30 PM GMT (Updated: 14 Oct 2019 8:40 PM GMT)

கோவை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கருமத்தம்பட்டி,

கோவையை சேர்ந்தவர்கள் தர்ஷன் (வயது 28), ராஜ்குமார் (23). இவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்து வருகிறார்கள். நேற்று இரவு அவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

இதில் ராஜ்குமாரிடம் ரூ.50 லட்சம் இருந்தது. அவர்கள் கோவையை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது தர்ஷன், ராஜ்குமார் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தர்ஷன், ராஜ்குமார் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருப்பூரை சேர்ந்த தமிழரசன் (22), சிவராஜ் (21) ஆகியோரும் கீழே விழுந்தனர். இதில் அவர்கள் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்தது. அதில் இருந்து 5-க்கும் மேற்பட்டவர்கள் கீழே இறங்கி ராஜ்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு அவர் வைத்திருந்த ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story