புயல், வெள்ளத்தில் இருந்து தப்புவது எப்படி? தீயணைப்பு துறையினர் ஒத்திகை


புயல், வெள்ளத்தில் இருந்து தப்புவது எப்படி? தீயணைப்பு துறையினர் ஒத்திகை
x
தினத்தந்தி 15 Oct 2019 4:00 AM IST (Updated: 15 Oct 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

புயல் வெள்ளத்தில் இருந்து தப்புவது எப்படி? என்பது பற்றி தீயணைப்பு துறையினர் ஒத்திகை நடத்தினர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்புத்துறையின் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை குறைப்பு தினத்தையொட்டி புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது எப்படி என்பது பற்றிய ஒத்திகை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.

இதில் மரம் விழுந்தால் உடனடியாக எந்திரங்கள் மூலம் எவ்வாறு அகற்றுவது? புயல், வெள்ளம் ஏற்படும் போது, பொது மக்கள் தங்களிடம் இருக்கும் பிளாஸ்டிக் குடம், தண்ணீர் கேன், காலியான சிலிண்டர் ஆகியவற்றை சவுக்கு கம்புகளில் கட்டி தப்புவது எப்படி? வீடு அல்லது சாலை விபத்தில் மயங்கி விழுந்து கிடப்பவரை போர்வை, ஜமுக்காளம் ஆகியவற்றை பயன்படுத்தி படுக்கை நிலையில் எவ்வாறு தூக்கி செல்வது? தீவிபத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்பது எப்படி என்பது பற்றி செய்து காட்டினர். இதற்காக ரப்பர் படகு, தீணைப்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை எடுத்து வந்து இருந்தனர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துைற மாவட்ட அதிகாரி புளுகாண்டி, உதவி மாவட்ட அதிகாரி கருணாகரன், நிலைய அதிகாரி சரவணன் உள்பட அதிகாரிகள் முன்னிலையில் தீயணைப்பு துறை வீரர்கள் இதனை செய்து காட்டினர். முன்னதாக இந்த ஒத்திகையை தொடங்கி வைத்து கலெக்டர் சிவராசு கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை

மழை அதிக அளவில் பெய்து வெள்ள அபாயம் ஏற்படும் போது வெள்ள எச்சரிக்கை வந்தவுடன். வீட்டில் உள்ள மின் சாதன இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து விட வேண்டும். குடிநீரை நச்சுத்தன்மை பரவாமல் பாதுகாக்க வேண்டும். உணவுப் பொருள்களை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். இடி, மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, மொபைல் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது. தீப்பிடித்த உடனே மிக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ (எண்100) தீயணைப்பு நிலையத்துக்கோ (எண் 101) போன் செய்யவும். இந்த போன் எண்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு, பேரிடர் மேலாண்மை தாசில்தார் ஜவகர் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story