அரூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பீதி


அரூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பீதி
x
தினத்தந்தி 15 Oct 2019 4:15 AM IST (Updated: 15 Oct 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

அரூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பலத்த சத்தத்தால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. இதனால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி்யில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு இடி இடிப்பதைபோன்று பலத்த சத்தம் கேட்டது. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு விழித்தனர். நில நடுக்கம் ஏற்பட்டதோ? என பீதி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். அரூர் திரு.வி.க. நகர், குறிஞ்சி நகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், மருதிப்பட்டி, எலவடை ஆகிய கிராமப்புற பகுதிகளிலும் இந்த சத்தம் கேட்டதாக தெரிகிறது.

சில இடங்களில் 5 வினாடிகள் வரையும், சில இடங்களில் 10 வினாடிகள் வரையும் இடி இடிப்பதை போன்று பலத்த சத்தம் கேட்டதாக அரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அரூர் பகுதிகளில் நள்ளிரவில் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பலர் விடிய, விடிய தூங்காமல் இருந்தனர். இருந்தபோதிலும் வீட்டு சுவர்களில் வெடிப்புகளோ, விரிசல்களோ ஏற்பட்டதாக கண்டறியப்படவில்லை.

இதுதொடர்பாக அரூர் உதவி கலெக்டர் பிரதாப் கூறுகையில், அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டதா? என பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திடம் கேட்டபோது நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்து உள்ளனர் என்று கூறினார்.

இதுதொடர்பாக பேரிடர் தடுப்பு பிரிவை சேர்ந்தவர்கள் கூறுகையில், கல்குவாரிகளில் உள்ள பாறைகளை சுற்றி பள்ளம் தோண்டி அதற்கு அடியில் வெடிபொருட்களை வைத்து வெடிக்க செய்தால் பல கி.மீ. தூரத்திற்கு சத்தம் கேட்கும். அவ்வாறு வெடி வைத்ததால் நில நடுக்கம் போன்ற சத்தம் உணரப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

பழுதான சீஸ்மோகிராப் கருவி

பழுதான சீஸ்மோகிராப் கருவியை படத்தில் காணலாம்.
இந்திய வானிலை ஆராய்ச்சி ஆய்வு மையம் சார்பில் சென்னை, சேலம், கொடைக்கானல் ஆகிய 3 இடங்களில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் கருவி அமைக்கப்பட்டுள்ளன. உலகில் எந்த இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இங்குள்ள கருவியில் அதன் அளவு நேரத்துடன் பதிவாகும். இந்தநிலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள சீஸ்மோகிராப் கருவி கடந்த 4 மாதங்களாக செயல்படாமல் உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறும் போது, ‘சேலத்தில் உள்ள சீஸ்மோகிராப் கருவி பழுதடைந்த காரணத்தால் அரூரில் பொதுமக்கள் உணர்ந்த நிலஅதிர்வு பதிவாகவில்லை. கருவி பழுதடைந்தது குறித்து டெல்லியில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். மேலும் நவீன சீஸ்மோகிராப் கருவி வாங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

Next Story