ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு
ராசிபுரம், பேளுக்குறிச்சியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் நேற்று கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் கலெக்டர் மெகராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி களங்காணி ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதி, பேளுக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதி, ராசிபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதி, ராசிபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி போன்ற விடுதிகளை நேரில் பார்வையிட்டு அங்கு மாணவ, மாணவிகளுக்கு உணவு சரியாக வழங்கப்படுகின்றதா? படுக்கைக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளனவா? என்று கேட்டறிந்தார்.
மேலும் கழிப்பிடங்கள், குளியலறை ஆகியவை சுத்தமாக உள்ளனவா? என்றும், சமையலறையில் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்படுகின்றதா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மின்விசிறி, மின்விளக்கு போன்றவை சரியாக இயங்குகின்றனவா? என்றும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் பேசுகையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரை அனைவரும் பாராட்டும் வகையிலும், நல்ல மதிப்பெண்கள் பெறும் வகையிலும் படிக்க வேண்டும். அன்றாடம் பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை விடுதியில் சக மாணவர்களுடன் உரையாடி, விவாதித்து நன்கு மனதில் பதிக்க வேண்டும்.
நமது பெற்றோர் படிக்க வைக்க இத்தனை வசதிகள் இல்லாத நிலையில் நமக்கு அனைத்து வசதிகளையும், அரசு செய்து கொடுத்து உள்ளது. அதனை சரியான முறையில் பயன்படுத்தி சாதனையாளர்களாக உருவாக வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ராஜா உள்பட விடுதி காப்பாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story