சேலம் சீத்தாராமன் செட்டி தெருவில் பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சேலம் சீத்தாராமன் செட்டி தெருவில் பழுதடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்,
சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், குறிப்பாக ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் 5 ரோடு, ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை ஏற்கனவே மேம்பாலம் கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல், குரங்குச்சாவடியில் இருந்து 5 ரோடு, புதிய பஸ் நிலையம், 4 ரோடு வரையிலும் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் வழியில் பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், வேலூர், சிதம்பரம், திருவண்ணாமலை, அரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 3 ரோடு, லீ பஜார், சீத்தாராமன் செட்டி தெரு வழியாக செல்கின்றன.
இதனால் இந்த வழித்தடம் வழியாக தினமும் ஏராளமான பஸ்களும், இதர வாகனங்களும் சென்று வருவதை காணமுடிகிறது. ஏற்கனவே, சீத்தாராமன் செட்டி தெருவில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் தெருவில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுவதுண்டு. அந்த சமயத்தில் பள்ளம் இருப்பது கூட தெரியாமல் பஸ்களை டிரைவர்கள் ஓட்டி செல்லும்போது கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதுதவிர, சாலையில் புழுதி கிளம்புவதால் இரு சக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தினமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் பிரதான சாலையாக திகழும் சீத்தாராமன் செட்டி தெருவில் பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் மேம்பாலம் அடிப்பகுதியில் தொடங்கி சீத்தாராமன் செட்டி தெருவில் கடைசி பகுதியாக திகழும் சத்திரம் மேம்பாலம் வரையிலும் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஆங்காங்கே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். இந்த வழியாக பஸ் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் உடனடியாக தார்சாலை போடுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்காக அவர், புதிய பஸ் நிலையம், 4 ரோடு வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் சென்றார். இதனால் 4 ரோடு பகுதியில் ஒரு புறமாக பழுதடைந்து காணப்பட்ட சாலையை இரவோடு இரவாக அதிகாரிகள் தார்சாலை போட்டு புதுப்பித்தனர். ஆனால் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் சீத்தாராமன் செட்டி தெருவில் உள்ள சாலையை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனில் அக்கறைக்கொண்டு அந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story