பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை


பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2019 4:30 AM IST (Updated: 15 Oct 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க மாநில அரசு நிதி ஒதுக்கிய நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி,

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் மிகப் பெரிய உவர்ப்பு நீர் ஏரி உள்ளது. சுமார் 37,956 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிப்பகுதியில் ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 69 மீனவ கிராமங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கியமான வாழ்வாதாரமாக விளங்குவது மீன்பிடித்தொழில். ஆரணிஆறு, காலங்கி ஆறு, சொர்ணமுகி ஆறு ஆகியவற்றின் வடிநில பகுதியான பழவேற்காடு ஏரியில், ஆற்றுநீர் நுழைந்து முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும்.

இந்தநிலையில் பருவமழையின் போது, ஆற்றில் அடித்து வரப்படும் கழிவுகள் ஏரியில் தங்கி உள்ளதால் பல இடங்களில் மண் திட்டுக்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக இயற்கையின் சீற்றத்தால் கடலும், ஏரியும் இணையும் பகுதியான முகத்துவாரம் கடல் மணலால் அடைபட்டது. இதனால் படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாத நிலை மீனவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் முகத்துவாரத்தை தூர்வார அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம்பலராமன் சட்டமன்றத்தில் விடுத்த வேண்டுகோளின் படி, பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார தற்காலிகமாக ரூ.1 கோடியே 40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியது.

பின்னர் வனத்துறையின் அனுமதி இல்லாமல் தூர்வாரும் பணி நடைபெறுவதாக கூறி அதற்கு தடை விதித்தது. வனத்துறை அனுமதி வழங்கிய நிலையில், தற்போது தூர்வாரும் பணி மீண்டும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும், தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு 27 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.

ஆனால் மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதியளித்த பின்னரே, நிரந்தர தூண்டில் வளைவு அமைக்கும் பணியை தொடங்க முடியும் என்பதால், விரைவில் இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story