தூத்துக்குடியில் ரசாயன வாயு கசிவு: தனியார் நிறுவனங்களில் ஆய்வு நடத்த உத்தரவு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடியில் ரசாயன வாயு கசிவு: தனியார் நிறுவனங்களில் ஆய்வு நடத்த உத்தரவு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:30 PM GMT (Updated: 14 Oct 2019 10:25 PM GMT)

தூத்துக்குடியில் ரசாயன வாயு கசிவு தொடர்பாக மாநகரில் உள்ள தனியார் நிறுவனங்களில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பாத்திமாநகர், பீச் ரோடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டதாக தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் மக்கள் புகார்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

தூத்துக்குடியில் ரசாயன வாயு கசிவு தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளரை உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு இருப்பதாக புகார்கள் வந்தன. ஆனால் அந்த நிறுவனம் பராமரிப்புக்காக கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாநகராட்சி பகுதியில் உள்ள எந்தெந்த நிறுவனங்களில் அமோனியா பயன்படுத்தப்படுகிறது, ஏதேனும் கசிவு ஏற்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் தூத்துக்குடியில் காற்று மாசை கண்டறிவதற்காக மாநகராட்சி அலுவலகம், திருச்செந்தூர் ரோடு, சிப்காட் வளாகம் ஆகிய இடங்களிலும், தனியார் கம்பெனிகளிலும் உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் மாசு உள்ள நகரமாகத்தான் உள்ளது. அதனை சரிசெய்ய இன்னும் சில நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. இதற்காக ஒரு செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு துறையின் மூலம் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளோம்.

குறிப்பாக சாலையோரங்களில் அதிக மரங்கள் நட வேண்டும். மாலை நேரங்களில் மாநகராட்சி பகுதியில் தூசி பறக்காமல் இருப்பதற்காக சாலைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும். லாரிகளில் நிலக்கரி உள்ளிட்ட சரக்குகளை மூடி எடுத்து செல்ல வேண்டும். இதுபோன்று ஒவ்வொரு துறை சார்பில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று திட்டம் வகுத்துள்ளோம். அதனை செயல்படுத்தி, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் காற்று மாசை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story