ஓமன் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்று மாயமான நம்புதாளை மீனவர்கள் 2 பேரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு


ஓமன் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்று மாயமான நம்புதாளை மீனவர்கள் 2 பேரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு
x
தினத்தந்தி 14 Oct 2019 11:15 PM GMT (Updated: 14 Oct 2019 10:55 PM GMT)

ஓமன் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்று மாயமான நம்புதாளை மீனவர்கள் 2 பேரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளது.

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்களான கார்மேகம் (வயது 50), ராமநாதன் (38), காசிலிங்கம் (36), மற்றொரு காசிலிங்கம்(23) ஆகியோர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவு பகுதியில் உள்ள கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த மாதம் 16-ந்் தேதி இவர்கள் 4 பேர் உள்பட 8 பேர் ஒரு படகில் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

ஒரு வாரத்தில் கரை திரும்ப வேண்டிய அவர்கள் 10 நாட்களாகியும் கரை திரும்பவில்லை. இந்த மீனவர்கள் புயலில் சிக்கி மாயமாகி விட்டதாக ஓமனில் வேலை செய்து வரும் நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் சிலர் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் நம்புதாளை கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவை நேரில் சந்தித்து மாயமான மீனவர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஓமன் நாட்டில் கடலில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த சடலங்கள் மஸ்கட்டில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து டி.என்.ஐ. மூலம் சோதனை செய்ததில் அவர்கள் மாயமான நம்புதாளை மீனவர்களான கார்மேகம், ராமநாதன் மகன் காசிலிங்கம் என்பது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் இவர்கள் வேலை செய்து வந்த அரேபிய கம்பெனி உரிமையாளர் இறந்த மீனவர்களின் சடலத்தை நம்புதாளைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யலாமா அல்லது அந்த நாட்டிலேயே அடக்கம் செய்யலாமா என கேட்டதுடன் அதற்கான ஆவணங்களையும் அனுப்பி வைக்க வேண்டும் என தகவல் கேட்டுள்ளார். இந்த தகவலை நம்புதாளையில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையறிந்த இறந்த மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் மீதமுள்ள 2 மீனவர்களின் கதி என்ன என்பதை அறிய முடியாமல் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து நம்புதாளை கிராம மக்கள் சார்பில் கல்கண்டு, முத்துராக்கு, ஆறுமுகம், காளிதாஸ் ஆகியோர் கூறுகையில், எங்கள் கிராம மீனவர்கள் மாயமாகி ஒரு மாத காலம் ஆகிறது. ஆனால் நேற்று தான் 2 மீனவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் மீன ்வளத்துறை எந்த தகவலையும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. மீதம் உள்ள இரண்டு மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பற்றிய தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு கடலில் மீன் பிடிக்க சென்று மாயமாகியுள்ள மீனவர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த மீனவர்களின் சடலங்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story