மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி


மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 15 Oct 2019 5:15 AM IST (Updated: 15 Oct 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், மதுவில் டீசல் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செங்குன்றம்,

சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள கொசப்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 24). இவர், சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரஞ்சனி என்ற சரண்யா(20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என தெரிகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும், அதைத்தொடர்ந்து நேற்று காலையும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

பின்னர் காலை 9 மணி அளவில் ரஞ்சித் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது மனைவி ரஞ்சனி, வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரை தூக்கில் இருந்து இறக்கி படுக்கையில் சாய்த்து வைத்த ரஞ்சித், பின்னர் தன்னிடம் இருந்த மதுவில் டீசலை ஊற்றி கலந்து குடித்துவிட்டு மனைவியின் உடல் அருகே மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

நீண்டநேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ரஞ்சனி பிணமாகவும், ரஞ்சித் மயங்கியநிலையில் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் பால்பண்ணை போலீசார், ரஞ்சனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story