டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருந்த 344 பேருக்கு நோட்டீஸ்


டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருந்த 344 பேருக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 16 Oct 2019 4:30 AM IST (Updated: 15 Oct 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருந்த 344 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் வீடு, வணிக நிறுவனங்களில் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து கலெக்டர் ஆனந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி நேற்று திருவாரூர் துர்காலயா ரோடு பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேவையற்ற கலன்களான டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகள் போன்றவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் எனவும், காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

344 பேருக்கு நோட்டீஸ்

பின்னர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கூறுகையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருந்ததாக ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 344 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சங்கரன், மாவட்ட மலேரியா அலுவலர் பழனிச்சாமி, சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story