நீர்மேலாண்மை திட்டத்தின் மூலம் வறட்சியை போக்க நடவடிக்கை - கலெக்டர் பேச்சு


நீர்மேலாண்மை திட்டத்தின் மூலம் வறட்சியை போக்க நடவடிக்கை - கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 15 Oct 2019 10:30 PM GMT (Updated: 15 Oct 2019 6:28 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் நீர்மேலாண்மை திட்டத்தின் மூலம் வறட்சியை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.

வேலூர், 

வேலூரை அடுத்த கணியம்பாடி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நாகநதி புனரமைப்பு திட்டத்தினை வாழும்கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர் குருதேவ், கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டை திறந்துவைத்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

வேலூர் மழைப்பொழிவு குறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 519 ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 571 ஏரிகள் மற்றும் 1,833 குளங்கள், ஊரணிகள் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் கால்வாய், ஓடைகள் இல்லாத கிராமமே இல்லை. ஆனால் இவற்றில் சரியான நீர்மேலாண்மை இல்லாததால் கிடைக்கும் மழைநீரை சேமிக்க முடியாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வாழும்கலை அமைப்புடன் இணைந்து தமிழக அரசு நாகநதி புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி உறை கிணறுகளை அமைத்து மழைநீரை பூமிக்குள் செலுத்தி நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து கிராமமக்கள், விவசாயிகள் பயனடைந்துவருகிறார்கள்.

நாகநதி புனரமைப்பு திட்டம் ரூ.53 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நமது நாட்டுப்பழ மரக்கன்றுகள் 50 நடும் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பல்லுயிர் பெருக்க பூங்காவாக மாற்றப்பட்டு பறவை இனங்கள் மூலமாக மரங்கள் அதிகரித்து ஒரு இயற்கை சூழலை கிராமங்களில் ஏற்படுத்திட வாய்ப்பாக அமையும்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சராசரி மழைப்பொழிவு 114 சென்டி மீட்டராக இருந்தது. தற்போது 92 சென்டிமீட்டர் மழைப்பொழிவே கிடைக்கிறது. அதேபோன்று வெப்பத்தின் அளவும் உயர்ந்துள்ளது. இந்த நிலையினை மாற்றி வேலூர் மாவட்டத்தில் நீர்மேலாண்மை திட்டத்தின் மூலம் வறட்சியை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நாகநதி புனரமைப்புதிட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரகுப்பன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர்கள் வஜ்ரவேலு, மலர்விழி, வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ரகு, ஜெயஸ்ரீ, தாசில்தார் சரவணமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story