திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் சாவு


திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் சாவு
x
தினத்தந்தி 15 Oct 2019 11:15 PM GMT (Updated: 15 Oct 2019 7:23 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு புனிதா என்ற மனைவியும், மோனிஷா (வயது9) என்ற மகளும் பிரகதீஷ் (5) என்ற மகனும் உள்ளனர். மோனிஷா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மோனிஷா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனில்லாமல் சிறுமி மோனிஷா பரிதாபமாக இறந்து போனார்.

மேலும் தண்டலம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் தண்டலம் கிராமத்திற்கு சென்று எந்த ஒரு சுகாதாரப்பணியிலும் ஈடுபடவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள் நேற்று கடம்பத்தூர்- பேரம்பாக்கம் சாலை கசவநல்லாத்தூர் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டலம் கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், லதா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தண்டலம் பகுதியில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்வதாகவும், சிறப்பு முகாம்கள் நடத்தி மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுயில் 1½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகள் நந்தினி (6). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நந்தினியை அவரது பெற்றோர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பினனர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தநிலையில் நந்தினிக்கு திடீரென காய்ச்சல் அதிகமானது. இதைத்தொடர்ந்து அவரை மீண்டும் சிகிச்சைக்காக அஸ்பத்திரிக்கு அழைத்துசென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 சிறுமிகள் மர்ம காய்ச்சலுக்கு இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story